சுவாமி விவேகானந்தர்- "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்”

 


சுவாமி விவேகானந்தர் 

"எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்

சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத்தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.

சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார்.   ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான பிரம்ம சமாஜத்தில் இணந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் அவர்கள், ஒரு காளி கோவிலில் பூசாரியாக இருந்தவர். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்ததாக கூறியுள்ளார். அவரைப்பற்றி சுவாமி விவேகானந்தருக்குத் தெரிய வந்து. தட்சனேஸ்வரம் சென்று ராமகிருஷ்ணரை சந்தித்தார். “கடவுளை பார்த்திருக்கிறீர்களா?” என்று விவேகானந்ததர் கேட்ட கேள்விக்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார் விவேகானந்தர்.

ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமானார். அதன் பின்னர், அவரது வாரிசாக சுவாமி விவேகானந்தர் பரிந்துரைக்கப்பட்டார்.

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றினார் விவேகானந்தர்.

டிசம்பர் 24 1892 இல் கன்னியாகுமரி  சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னாளில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தன்னுடைய பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆன நிறைவு விழாவைக் கொண்டாட அமெரிக்க சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற இருந்தன.  

முன்னர் தன் பயணத்தின்போது இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியைச் சந்திக்கும் வாய்ப்பு விவேகானந்தருக்கு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான பாஸ்கர சேதுபதிக்கு சிகாகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மை விட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்த மதம், தாவோ, கன்ஃபூசியஸ் மதம், ஷிண்டோ மதம், ஜொராஷ்டிரிய மதம், ஜைன மதம், இந்துமதம் என 10 மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிகாகோ சர்வசமயப் பேரவையில், 1893-செப்டம்பர் 11 ஆம் தேதி, காலை 10 மணிக்கு சுவாமி விவேகானந்தர் அவர்கள் “அமெரிக்க நாட்டின் சகோதரிகளே! சகோதரர்களே!” என்று கூறி, தன் சொற்பொழிவைத் துவக்கினார். இந்தச் சொற்களைக் கேட்டு, அங்கிருந்த ஆயிரக் கணக்கான மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. அவர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து உற்சாகத்துடன் கைதட்டி விடாமல் தொடர்ந்து கரவொலி எழுப்பினார்கள்.

அந்தச் சொற்களில் அவரது எல்லையற்ற ஆன்மிக வலிமையும் மனத்திடமும் சேர்ந்து வெளிப்பட்டது. சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அவர் சகோதரிகளே சகோதரர்களே! என்று கூறியதன் மூலம், உலகம் முழுவதும் ஒரே குடும்பம், எல்லோரும் உறவினர்கள் என்ற இந்தியச் சிந்தனையை வெளிப்படுத்தினார்.

மொத்தம் நான்கு நிமிடங்கள் நீடித்த அவரது பேச்சில் மதத்திற்கு ஜாதியில்லை, ஜாதி என்பது வெறும் ஒரு சமுதாய ஏற்பாடுதான் என்ற சாராம்சத்தோடு தன் உரையை ஆற்றி முடித்தார். அடுத்தடுத்த நாட்களில் நடந்த கூட்டங்களில், அளவுக்கு மீறிய மதப்பற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார்.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியாக நடத்தப்படும் கலாச்சார மையங்கள் அனைத்தும் விவேகானந்தர் மையங்களாக பெயர் மாற்றப்பட்டது.

மே1,1897ஆம் ஆண்டு ராமகிருஷ்ணரின் நினைவாக மக்கள் பணியாற்றிடவும், சேவை புரிந்திடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு கொல்கத்தா,பேலுரில் இராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பை விவேகானந்தர் நிறுவினார். நலவாழ்வு, பேரழிவு மீட்பு பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, கல்வி மற்றும் பண்பாடு காத்தல் என பல துறைகளில் ராமகிருஷ்ணா மிஷன் இன்றுவரையில் முக்கிய பங்காற்றி வருகிறது.

மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று இளைஞர்களுக்கு அறிவூட்டிய விவேகானந்தர் இளைஞர்களின் கையில்தான் உலகை வல்லரசாக்கும் சக்தி இருப்பதாக நம்பினார்.

தேசிய இளைஞர் தினமாக விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி-12 கொண்டாடப்படுவது சாலப் பொருத்தமான ஒன்று என்பதில் மாற்றில்லை.  

கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. மற்றவை எல்லாம் வெறும் குப்பை என அரசியல் குறித்த தன் பார்வையை தெளிவாக வைத்திருந்தார்.

இந்திய தேசத்தின் சமய விடிவெள்ளி, இளைஞர்களின் எழுச்சி சுவாமி விவேகானந்தர் அவர்கள் தனது 39-வது வயதில் கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இயற்கை எய்தினார்.

இளைஞருக்கான வெற்றி மந்திரத்தை அளித்த சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளில் அவரைப்பற்றி மாணவர்களும் இளைஞர்களும் ஒரு நிமிடமேனும் நினைத்துப் பார்த்தல் தத்தமது மனஉறுதிக்கும், தன்னம்பிக்கை விதைக்கும் உரமாக இருக்கும் என்பது உறுதி..

"எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்


Post a Comment

Previous Post Next Post