அடிப்படை கடமைகள் Fundamental Duties

Fundamental Duties- அடிப்படை கடமைகள்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது அதில் நம் மக்களுக்கான கடமைகள் எவையும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1976 இல் செய்யப்பட்ட 42வது அரசியலமைப்பு திருத்தம் ஸ்வரன் சிங் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரை பேரில்  10 அடிப்படை கடமைகளை இந்திய அரசியலமைப்பில் இணைத்தது. 

அடிப்படை கடமைகள் 51 A என்னும் ஷரத்தாக அரசியலமைப்பின் பாகம் IVA பகுதியில் சேர்க்கப்பட்டன.

பின்னர் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 86 ஆவது சட்டத் திருத்தத்தில் அடிப்படை கடமைகளில் ஒரு கூடுதல்.கடமையாக 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பெற்றோர்களின் கடமை என்பதை வலியுறுத்தி ஒரு உறுப்பு சேர்க்கப்பட்டது ஆக தற்போது நடப்பில் மொத்தம் 11 அடிப்படை கடமைகள் உள்ளன..

அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் அடிப்படை உரிமைகளை அர்த்தம் உள்ளவைகளாக ஆக்குவதற்காகும்.

இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் ரஷ்யாவின் அரசியலமைப்பை முன்னுதாரணமாக கொண்டு சேர்க்கப்பட்டது என்பார்கள், ஜப்பான் நாட்டு அரசமைப்பும் அந்நாட்டு மக்களுக்கு சில அடிப்படை கடமைகளை வலியுறுத்தியுள்ளது.

அடிப்படைக் கடமைகளை ஒரு சாதாரண குடிமகன் கடைபிடிக்காதபோது அரசியலமைப்பு சட்டப்படி அவர் தண்டனைக்கு உள்ளாகுவதில்லை.  அதேவேளையில் அடிப்படை உரிமைகளை மீறும்போது அரசியலமைப்பு சட்டப்படி அதற்குரிய தண்டனையை வழங்க வழிவகை செய்கிறது. இதுவே அடிப்படை உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உள்ள  வித்தியாசமாகும்.

அடிப்படைக் கடமைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும்வகையில் மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பாடப்புத்தகங்களில் இதை அச்சிட வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி அடிப்படை கடமைகள் பள்ளி பாடபுத்தகங்களில் அச்சிடப்படுகின்றன.

 மேலும் மத்திய மாநில அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடக்கும்போது போட்டி தேர்வர்களிடம் அடிப்படைக் கடமைகள் குறித்த வினாக்கள் கேட்கப்படுகின்றன. 

 போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த அடிப்படை கடமைகளை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

 போட்டித்தேர்வுகள் மாணவர்கள் மட்டுமன்றி அனைத்து இந்திய குடிமகன்களும் இந்த அடிப்படைக் கடமைகளை முழுமையாக தெரிந்து வைத்துக்கொண்டு அவற்றை பின்பற்ற வேண்டும். .அது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு நாம் கட்டுப்பட்டு நடப்பதற்கான ஒரு வழி என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் உணர வேண்டும்..

அடிப்படைக் கடமைகளில் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பது, நாட்டின் தேசியக் கொடியை மதிப்பது, பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் இருப்பது, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, பெண்களின் கண்ணியத்திற்கு கேடு செய்யாமல் இருப்பது  போன்ற பொதுவான கடமைகள் தான் வலியுறுத்தப்படுகின்றன. மிக முக்கியக் கடமைகளான வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களித்தல் போன்ற கடமைகள் வலியுறுத்தப்படவில்லை. 

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு மக்களாட்சி நாட்டில் வாக்களிப்பது என்பது அடிப்படை உரிமையும் இல்லை அடிப்படை கடமைகளிலும் இல்லை என்பது ஆச்சரியப்படுவதற்கு உரிய ஒரு விஷயம் ஆகும்.

பின்வரும் 11 அடிப்படைக் கடமைகள் நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் ஆகும்.. 
(அவைகளை எவ்வாறு எளிதாக மனப்பாடம் செய்து கொள்வது, நினைவில் வைத்துக் கொள்வது என்ற குறிப்பும் அதன் அருகிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.)

1. ஷரத்து 51 A (a) - ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசியலமைப்பிற்கு கீழ்ப்படிந்து அரசியலமைப்பு நிறுவனங்கள் அரசியல் அமைப்பின் நோக்கம் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற சின்னங்களை மதிக்க வேண்டும். 
 (a for arasiyalamaippu/ a for Anthem, abide flag)

2.ஷரத்து 51 A (b) - விடுதலைப் போராட்டத்தின் போது வீர தீரமாக செயல்பட்ட தியாகிகளின் லட்சியங்களை நினைவிற்கொண்டு அவற்றை போற்றி பின்பற்ற வேண்டும்.
(b for brave)

3.ஷரத்து 51 A (c)- இந்தியாவின் இறைம ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
(c for centre - co.operation, Unity)

4.ஷரத்து 51 A (d)- தேவைப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்.
(d for Defence, Demand)

5.ஷரத்து 51 A (e)- சமய மொழி வட்டார வேறுபாடுகளை கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சகோதரத்துவமும் இணக்கம் ஏற்பட பாடுபட வேண்டும்
(e for Equality)

6.ஷரத்து 51 A (f)-  கூட்டுக் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாக்க வண்டும் பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும் (f for French (culture), female)

7.ஷரத்து 51 A (g)-  காடுகள் ஏரிகள் ஆறுகள் விலங்கினங்கள் ஆகியவை அடங்கிய புறச் சூழலை பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்களின் மீது கருணை காட்ட வேண்டும். (g for Green Environment, Garunya)

8.ஷரத்து 51 A (h)-  அறிவியல் உணர்வு மனிதநேயம் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும். (h for Humanity and Hi tech)

9.ஷரத்து 51 A (i)- வன்முறையை வெறுத்து ஒதுக்கி பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். (I for Individuality.. Self discipline)

10.ஷரத்து 51 A (j)- தனிப்பட்ட அளவிலும் கூட்டு செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயற்சி செய்வதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு  முயற்சி செய்ய வேண்டும். (j for Jointly..)

11.ஷரத்து 51 A (k)- 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புதல் வேண்டும். (k for Knowledge, education/ kalvi)

--  அரசு தம் குடிமக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற இந்த அடிப்படை கடமைகள் மிக அவசியமானவைகளாக உள்ளன. 
எனவே நம்மால் முடிந்த அளவு கடமைகளை சரிவர செய்வோம், நாட்டு முன்னேற்றத்தில் பங்கு வகிப்போம், தனிமனிதனாய் கடமை தவறாமல் மனநிறைவாய் வாழ்வோம்..
 
நன்றி.


Post a Comment

Previous Post Next Post