புவியின் வளிமண்டல அடுக்குகள் (Atmosphere)


புவியின் வளிமண்டல அடுக்குகள்... 

 பூமியைச் சுற்றி இருக்கும் வளிமண்டலத்தில் பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல அதன் உட்பொருட்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

 பூமியில் இருந்து 50 கிலோமீட்டர் உயரம் வரையிலான வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கார்பன்-டை-ஆக்சைடு, ஹைட்ரஜன், நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான் போன்ற வாயுக்களை உள்ளடக்கியதாக உள்ளது.

வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் பின்வரும் சதவீதத்தில் உள்ளன.

நைட்ரஜன்: 78.09 %

ஆக்சிஜன் : 20.90 %

ஆர்கான்    : 0.93 %

பிற வாயுக்களான ஆர்கான், கார்பன்-டை-ஆக்சைடு, ஹைட்ரஜன், நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான் ஆகியவை : 0.03 %

 




வளிமண்டலம் கீழ்கண்ட அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 ட்ரப்போஸ்பியர் (T)

ஸ்ட்ரடோஸ்பியர் (S)

 மீஸோஸ்பியர் (M)

அயனோஸ்பியர்(A) & தெர்மோஸ்பியர் (அயனோஸ்பியரின் நடுப்பகுதி)

எக்ஸோஸ்பியர்(E) (அயனோஸ்பியரின் வெளி விளிம்புப் பகுதி)

- மேற்குறிப்பிட்ட வளிமண்டல அடுக்குகளை வரிசைக்கிரமப்படி நினைவில் வைத்திருத்தல் போட்டித்தேர்வுகளுக்கு அவசியம். அவற்றின் ஆங்கில முதல் எழுத்துக்களை சேர்த்து (TSMAE) டெஸ்மா என்ற சட்டத்தை நினைவில் வைத்துக் கொண்டால் மிகவும் எளிது.

இனி இந்த வளிமண்டல அடுக்குகளின் சிறப்புகளாக போட்டித்தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் தொடர்பான குறிப்புகளை காண்போம்.

 



ட்ரப்போஸ்பியர்:

பூமியின் மேற்பரப்பில் இருந்து 8 முதல் 13 கி.மீட்டர் வரை பரவியுள்ள வளிமண்டலப் பகுதி ட்ரப்போஸ்பியர் என அழைக்கப்படுகிறது.

மேகங்கள், மழை, பனி உள்ளிட்டவைகள் இருக்கும் இடமான இந்த அடுக்கில்தான் வானிலை மாற்றங்கள் (WEATHER CHANGES) நடக்கின்றன. தொட்டபெட்டாவில் மேகங்களை தொட்டு மகிழ்ந்திருப்போம்..

வளிமண்டலத்தில் மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறையத் தொடங்கும். ஒரு கிலோ மீட்டர் அளவு மேலே செல்லும்போது சுமார் 6.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை குறைகிறது. ஊட்டி மலையில் மேலே ஏற ஏற ஜில்லுன்னு ஒரு காற்று என சிலேகித்திருப்போம்..

வளிமண்டலத்தின் சுமார் 75 சதவீத காற்றுகளையும், நீராவிகளையும் டிரப்போஸ்பியர் கொண்டுள்ளது.

உயரம் செல்ல செல்ல வெப்பநிலை குறைகிறது. கூடவே அழுத்தமும் குறைகிறது. காற்று குளிர்ச்சியடையும்போது விரிவடைகிறது. இதனாலேயே கீழே உள்ள காற்றைவிட மேலே உள்ள காற்று குளிர்ச்சியாக உள்ளது.

டிரப்போஸ்பியரின் மேல் எல்லை டிரப்போபாஸ் எனப்படுகிறது. இது துருவப்பகுதியில் 7 முதல் 10 கி.மீ உயரத்திலும், நில நடுக்கோட்டுப் பகுதியில் 17-18 கி.மீ. உயரத்திலும் அமைந்துள்ளது.


ஸ்ட்ரடோஸ்பியர்:

டிரப்போஸ்பாஸ் எனப்படும் டிரப்போஸ்பியரின் மேல் அடுக்கு எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ உயரத்திற்கு இந்த அடுக்கு பரவியுள்ளது.

வணிக நோக்கிலான விமானங்கள் இந்த அடுக்கின் கீழ்பகுதியில் பறக்கும்.

ஜெட் வகை விமானங்கள் இந்த அடுக்கின் நிலைத்தன்மை காரணமாக இதில் பறக்க ஏதுவாக இருக்கும்.

மிக முக்கியமான ஓசோன் அடுக்கு ஸ்ட்ரடோஸ்பியரரில் அமைந்துள்ளது.

உயரத்தின் காரணமாக அதிகரிக்கும் வெப்பநிலையால் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களை உள்வாங்கி பூமியை பாதுகாக்கிறது ஓசோன் அடுக்கு.  

மனிதர்களை தோல் புற்றுநோய் உள்ளிட்ட சுகாதாரக் கேடுகளில் இருந்து காக்கும் ஓசோனுக்கு நாம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே CFC எனப்படும் குளோரோ ஃபுளோரோ கார்பன் எனப்படும் ஃப்ரியான், ஹாலோன் உள்ளிட்ட வாயுக்களின் பயன்பாட்டினை குறைக்கச் சொல்லி கூவிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நம் வீடுகளில் பயன்படுத்தும் குளிர்ச்சாதனப்பெட்டி, பிறந்த நாள் பார்ட்டிகளில் கொட்டமடிக்கும் ஸ்ப்ரே கன்ஸ், தீயணைப்பு சாதனங்கள் உள்ளிட்டவைகளில் இந்த CFC  வாயுக்களையே உபயோகிக்கிறோம்.

ஓசோனுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அதன் அடுக்கின் தடிமன் (Thickness of the Layer) குறையும். அதை  DOBSON (டாப்சன்) Unit (DU) என்ற அலகில் குறிப்பர்.

ஓசோன் அடுக்கு சுமாராக 300 DU (டாப்சன் யூனிட்) அளவு கொண்டவை. அதாவது 3 மி.மீ  அளவிலானது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள்.. அதுபோல இந்த ஓசோன் சிறிய லேயராக (0.12 இன்ச் அளவில்) இருந்துகொண்டு நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதை  நினைத்து ஓசோனுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோம்..



ஏற்கனவே 1 மி.மீ தேய்ந்துவிட்டதாக அறிவியலார்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஓட்டை விழுந்துவிட்டதென நாம் செய்திகளில் படிக்கிறோமே.. அது அந்த அடுக்கின் தடிமன் குறைவதை குறிப்பிடுவதே ஆகும்.

தடிமன் குறைவதால் புற ஊதாக்கதிர்களை உறிஞ்சும் திறன் குறைந்து அவை ஓசோனை ஊடுருவி பூமிக்கு வந்தடைந்து பெரும் பாதிப்பை உண்டாக்கும்.. புவியின் வெப்பநிலையும் அதிகரித்து சுற்றுச்சூழலில் பெரும் அழிவை உண்டாக்கும்.

ஓசோன் அடுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காகவே நாம் உலக ஓசோன் தினம் என்று ஒரு நாளை கொண்டாடுகிறோம். அது எந்த தேதி என்பதை கமெண்ட் செக்சனில் குறிப்பிடுங்கள். 

(சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உலக நாடுகளின் ஒப்பந்தங்களை போட்டித்தேர்வுக்காக படிக்க வேண்டும். விரைவில் அந்த பதிவையும் போடுவோம்..)

 

மீசோஸ்பியர்

பூமிக்கு மேலே 50 கி.மீட்டரில் இருந்து 90 கி.மீட்டர் வரை பரவியுள்ள மீசோஸ்பியர் அடுக்கில். ஸ்ட்ரட்டோஸ்பியரில்  உயரத்தால் அதிகரித்த வெப்பநிலை  இந்த அடுக்கில் மேலே செல்ல செல்ல மிகவும் குறைந்து கொண்டே இருக்கும் .

மிகவும் குளிரான அடுக்கான மீசோஸ்பியரில் வெப்பநிலை உயரம் செல்ல செல்ல குறையும் வெப்பம், மீசோபாஸ் எனப்படும் மீசோஸ்பியரின் வெளி எல்லைப்பகுதியில் மைனஸ் 96 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

எரி நட்சத்திரங்கள் அடிக்கடி மழையாய் பொழிந்து எரிந்து அழியும் வளிமண்டல பகுதி இந்த மீசோஸ்பியர்.

 

தெர்மோஸ்பியர் / அயனோஸ்பியர்

மீசோஸ்பியருக்கு மேலே 80 கி.மீட்டரில் இருந்து 800 கி.மீட்டர் வரையிலான பகுதி தெர்மோஸ்பியர் .

இங்கு மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கச் செய்கிறது.

தெர்மோஸ்பியர் அடுக்கில்  80 கிமீ வரையிலான பகுதி அயனோஸ்பியர் எனப்படும்.

இங்கு சூரியனின் கதிர்வீச்சு தன் சக்தியால் எலக்ட்ரான்கள், அணுக்கள், மூலக்கூறுகள் என பிரித்து மேய்ந்து நேர்மின் அயனிகளை உருவாக்குகிறது. இது ரேடியோ அலைகளை எதிரொலித்து வானொலி ஒலிபரப்பிற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிற்கும் உதவி செய்கிறது.

இந்த அயனோஸ்பியரின் நடுப்பகுதி தெர்மோஸ்பியர் எனப்படும். இங்கு வெப்பநிலை 100 டிகிரிக்கு மேலே இருக்கும். இதன் வெளி விளிம்பு எக்ஸோஸ்பியர் எனப்படும் அடுத்த வளிமண்டல அடுக்காகும்.


எக்ஸோஸ்பியர்

தெர்மோஸ்பியரின் வெளி விளிம்பு எக்ஸோஸ்பியர் வளிமண்டல அடுக்கு எனப்படும்.

500 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள வளிமண்டலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இங்கு புவியீர்ப்பு விசை மிகவும் குறைவாக இருக்கும்.


--    இவைகளின்றி மேக்னட்டோஸ்பியர் எனப்படும் பூமியின் மிகப்பெரிய காந்தமாக செயல்படும் அடுக்கும் உள்ளது. எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்களை வடிகட்டி 3000 முதல் 16000 கி.மீ அளவில் இரு எல்லைக்குள் பூமிப்பந்தை சுற்றி காந்தப்புல கதிர்வீச்சு வளையமாக மேக்னட்டோஸ்பியர் உள்ளது.


- அனைத்து போட்டித்தேர்வுகளிலுமே நிச்சயமாக பூமியின் வளிமண்டலம் தொடர்பான வினாகள் கேட்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் தெளிவாக இருக்க வேண்டும். அடுத்தடுத்த பதிவுகளில் எஞ்சியுள்ள முக்கிய பகுதிகளைக் காண்போம். 

 

💥💥💥💥

சமச்சீர் கல்வி புவியியல்(GEOGRAPHY) STUDY MATERIALS DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்... 

💥💥💥💥

Post a Comment

Previous Post Next Post