அரசியலமைப்பு- ஆதாரச்சட்டம் - அவசியம் அறிந்து கொள்வோம்..

 


அரசியலமைப்பு சட்டம் குறித்து படிக்கும் முன்னர் அது குறித்த ஒரு தெளிவான பார்வை அடிப்படை குடிமகனாக ஒரு படித்த இளைஞனாக நமக்கு அவசியம்..  போட்டித்தேர்வுக்கு தேவையான வகையில் தயாராவதற்கு முன்னர் அது குறித்து இந்த பாகத்தில் ஒரு புரிதலை தரவே இப்பதிவு…

அரசியலமைப்பு (CONSTITUTION)

ஒரு நாட்டில் தெளிவான சட்ட முறையான ஆட்சி நடைபெற அரசியலமைப்பு சட்டம் மிக அவசியமானது.

ஒரு நாடு ஜனநாயக முறையிலான நாடாக இருந்தாலும், சர்வாதிகார நாடாக இருந்தாலும் அதை வழிநடத்த ஒரு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பது நிதர்சனம். அவ்வாறான விதிமுறைகள்தான் அரசியலமைப்பு என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளன என்ற அடிப்படையை புரிந்தாலே அரசியலமைப்பின் முக்கியத்துவம் நமக்கு புரிந்து விடும்.

ஒரு அரசியலமைப்பின் தன்மை ஒரு நல்ல அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் அதிகாரங்களை குறிப்பிடுவதாக இருக்கும்

 நாட்டு குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும்.. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசியலமைப்பு சட்டத்தை கூறினாலும், அது உண்மையல்ல. அரசியலமைப்பு என்பது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்படாமலும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்பதை உணரவேண்டும்.

உதாரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்தை குறிப்பிடலாம். இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட ஒன்று. இங்கிலாந்தில் எழுதப்படாத மரபு விதிகளை கொண்டு அரசியலமைப்பு செயலாற்றுகிறது.

அரசியலின் தந்தை என அழைக்கப்படும் அறிஞர் அரிஸ்டாட்டில் "குடிமக்கள் அரசின் ஒரு அங்கம் எனவும் அவர்களுடைய நடவடிக்கைகளை ஒன்றோடு ஒன்று அரசியலமைப்பு தொடர்புபடுத்தி சீர்படுத்துகிறதென குறிப்பிட்டுள்ளார்.

பிரைஸ் (Bryce) எனும் அறிஞரோஒரு சமுதாயம் உருவாகி ஆளப்பட ஒட்டுமொத்த சட்டங்களும், மரபுகளும் உள்ளடங்கிய விதிமுறைகளின் பெட்டகமே அரசியலமைப்புஎன்கிறார்.

உல்சே(Woolsey) எனும் அறிஞர் “அரசியலமைப்பு என்பது அரசாங்கத்தின் அதிகாரத்தை பற்றியும் ஆளப்படுவோரின் உரிமைகள் பற்றியும் இவை இரண்டிற்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றியும், எடுத்துக் கூறும் விதிகளின் தொகுப்பு" என்று கூறுகிறார்.

பௌசீயர் (Boucier) என்பவர்ஒரு அரசின் அரசமைப்பு சட்டம் என்பது அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்ற கொள்கைகளின் அடிப்படையிலும் அந்த அரசின் இறைமை அதிகாரம் யாருக்கு அல்லது எதற்கு தரப்பட்டிருக்கின்றது, என்றும் அந்த அதிகாரம் எந்த வகையில் செயல்படுத்தப்படுகின்றது என்றும் எடுத்துக்காட்டும் சட்டமாகும்என்று விளக்குகிறார்.

அரசாங்கம் அல்லது சமுதாயத்தில் இறைமை அதிகாரம் தரப்பட்டிருக்கும் முறையை விளக்குவதே அரசமைப்பு சட்டம்என்று ஜார்ஜ் கார்ன்வெல் லூயிஸ் என்பவர் எடுத்துரைக்கிறார்.

சர் ஜேம்ஸ் மெக்கின்டோ என்பவர்குடிமக்களுக்கு இன்றியமையாததான சலுகைகள் மற்றும் உயர் திகாரிகளுக்கு தரப்படும் முக்கியமான உரிமைகளை ஒழுங்குப்படுத்துகின்ற எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத சட்டங்களே ஒரு அரசின் அரசியலமைப்புச் சட்டமாகும்என கூறியுள்ளார்.

அரசமைப்பு சட்டமே அரசாங்கமாகும்என்றார் லீகாக் (Leacock). “உயர் அரசாங்கம் ஒன்றின் அமைப்பு முறையை ஏற்படுத்துவது அரசமைப்புஎன்று ஆஸ்டீன் (Austin) கூறுகின்றார்.

மேலே கூறப்பட்டுள்ள அரசியல் அறிவார்ந்த அறிஞர்களின் விளக்கங்களின் அடிப்படையில் அரசமைப்பு சட்டம் என்பது…

ஒரு நாட்டின் ஆதாரச் சட்டமாகும்.

எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம்.

அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் அதிகாரத்தை அது விவரிக்கின்றது.

குடிமக்களின் உரிமையை அது கூறுகின்றது.

ஆளப்படுவோருக்கும், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.

அரசியலமைப்பே நாட்டின் உயர்ந்த சட்டமாகும். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்--- என உணர்ந்து கொள்ளலாம்.

அரசியலமைப்பின் அவசியம்

அரசியலமைப்பு அவசியமான ஓர் அடிப்படையான ஆவணம் என்று அனைத்து நாடுகளையும் உணர்ந்து கொள்ள வைத்த நிகழ்வு, அமெரிக்காவில் கி.பி. 1776-ஆம் ஆண்டில் ஏற்பட்ட CIVIL WAR எனப்படும் மக்கள் புரட்சி ஆகும்..

அரசியலமைப்பு என்பது மக்களாட்சியின் அடிப்படை, ஆதாரம், அஸ்திவாரம் என்று கருதப்படுகிறது. அரசியலமைப்பு ஏன் தேவையென நமக்கு சில கேள்விகள் எழுமாயின் அதற்கான காரணங்கள்....

1. அரசமைப்பு சட்டம் அரசாங்கத்தின் கடிவாளமாகும்

2. தனி மனித உரிமையை பாதுகாக்கவும்

3. சட்டத்தின் ஆட்சி நிலைக்கவும்

4. குழப்ப நிலையிலிருந்து மீட்கவும்

5. இறைமை அதிகாரத்தை வரையறுக்கவும்

6. நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளின் விருப்பு, வெறுப்புகளை கட்டுப்படுத்தவும் அரசியலமைப்பு சட்டம் அவசியமானதொன்றாகும்..

-- மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, டாக்டர்.அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு அடிப்படை சட்டத்தின் தத்துவத்தை உள்வாங்கி உன்னதமானதொரு சட்டமாக நமது இந்திய அரசியலைமைப்பு சட்டத்தினை உருவாக்கி நமக்கு அளித்துள்ளனர்..  

.. அடுத்தடுத்த பாகங்களில் அரசியலமைப்பை படிப்போம்.. 

நன்றி.

 💥💥💥💥💥சமச்சீர் கல்வி இந்திய அரசியலமைப்பு (POLITY & CIVICS) Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்...💥💥💥💥💥


Post a Comment

Previous Post Next Post