ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...
சில அன்றாட அறிவியல் நிகழ்வுகளுக்கு பின்னே இருக்கும் காரண விளக்கங்களே பல சமயம் போட்டித்தேர்வில் வினாக்களாக வருகிறது. அத்தகைய அறிவியியல் வினாக்களில் முதல் பாகமாய் இங்கே சிலவற்றை காண்போம்..
அன்றாட அறிவியல் - Science in our daily life- PART 1
வானவில் ஏற்படக் காரணம் ஒளிப் பிரிகை(Dispersion of light)
வானம் நீல நிறமாகத் தெரியக் காரணம் அலை நீளம் குறைவாக உள்ள நீல நிறம், காற்றின் மூலக்கூறுகளால் அதிகம் சிதறடிக்கப்படுகிறது.
தொடுவானம் (Horizon) சிவப்பாகத் தெரியக் காரணம், அலை நீளம் அதிகமுள்ள சிவப்பு நிறத்தைத் தவிர, பிற நிறங்கள் அனைத்தும் சிதறடிக்கப்படுகிறது.
வெய்யில் காலங்களில் அடர்த்தியான அல்லது கறுப்பு உடைகளைவிட வெண் நிற ஆடைகள் வசதியாக இருப்பதேன் தெரியுமா?-- வெண்ணிற ஆடைகள் வெப்பத்தை மிகவும் அதிகமாக பிரதிபலிக்க கூடியவை. மேலும், அவை வெப்பத்தைக் குறைந்த அளவே உறிஞ்சிக் கொள்ளும்திறன் கொண்டவை. மாறாக கறுப்பு நிறம் வெப்பத்தை அதிகம் உறிஞ்சிக்கொள்ளும். எனவே, வெய்யில் காலங்களில் வெண்ணிற ஆடைகள் வசதியாக இருக்கின்றன.
இருட்டில் வௌவால்கள் பறப்பது எப்படி தெரியுமா?-- வௌவால்கள் பறக்கும்போது அல்ட்ரா சவுண்ட் அலைகளை உற்பத்தி செய்யும். அந்த அலைகள் வழியில் தடை ஏதேனும் இருந்தால் அதில் மோதி வௌவால்களைத் திரும்பி அடையும். அதை வைத்து வெளவால்கள் தன் பாதையை மாற்றிக் கொண்டு எளிதாகப் பறக்கும்.
நீரில் மூழ்கியுள்ள குச்சி வளைந்தது போல் தெரியக் காரணம் - ஒளி விலகல்(Refraction)மின் விளக்குகள் (Electric Lamps), மின் சமிக்ஞைகள் (Elecric Signals) மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக மாற்றுகின்றன.
வானொலியில் மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது
துணி துவைக்கும் இயந்திரம் (Washing Machine), மின்சார மோட்டார் (Electric Motor) மாவு அறைக்கும் இயந்திரம் (Wet Grinder) போன்றவற்றில் மின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது.
மின் சமைப்பான் (Electric Cooker), மின் சலவைப் பெட்டி, (Iron Box) போன்றவற்றில் மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவை அனைத்தும் ஆற்றல் அழிவிண்மை விதியின் அடிப்படையில் செயல்படுகின்றன.
சுடுநீர் ஊற்றப்பட்ட கண்ணாடி டம்ளரின் உள், வெளி அடுக்குகள் வெவ்வேறு வேகத்தில் விரிவடைவதால் அது விரிசல் அடைகிறது.நீராவி குளிர்விக்கப்படுவதால் நீர்மமாகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் குளிர் சாதனப் பெட்டி (Refrigerator) செயல்படுகிறது.
வளைவான சாலைகள், ரயில் தடங்கள் ஒரு பக்கம் சற்று உயர்வாக கட்டப்பட்டிருப்பது ஏனென்றால், வேகமாகச் செல்லும் ரயில் அல்லது பஸ் வளைவில் திரும்பும்போது உள் பக்கமாகச் சாயும். உயர்த்தப்பட்ட பகுதி, வளைவைக் கடக்கும்போது தேவைப்படும் மையக் குவி விசையைக் கொடுக்கும்.
வானில் நட்சத்திரங்கள் மின்னக் காரணம் - ஒளி விலகல்
வைரம் மின்னுவதற்கும், கானல் நீர் தெரிவதற்கும் காரணம்- முழு அக எதிரொளிப்பு (Total Internal Reflection).
சோப்பு நுரையில் பல வண்ணங்கள் தெரியக் காரணம்- ஒளியின் குறுக்கீட்டு விளைவு (Interference of Light)
கண்ணாடி ஒளி இழைகளில் முழு அக எதிரொளிப்பு அதிகம் உள்ளதால் அவை தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுகின்றன.
'ஒற்றை நிற ஒளிக் கற்றைகளை (Monochromatized light) உருவாக்கப் பயன்படுவது- லேசர்.
LASER - Light Amplification by Stimulated Emission of Radiation.
போலராய்ட் காமிராவின் செயல்பாட்டுத் தத்துவம் - ஒளியின் தள விளைவு (Polarization of Light).
மின்னலுக்குப் பின் இடியோசை கேட்கக் காரணம ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம்.
மலைப்பகுதிகளில் பனிக்கால இரவுகளில் நீர்க்குழாய்கள் வெடிப்பது ஏன் எனில், பனி இரவுகளில் மலைப்பகுதியில் வெப்பம் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாக ஆகிவிடும். குழாய்களுக்குள் இருக்கும் நீரானது உறைந்து பனிக் கட்டியாகிவிடும். பனிக்கட்டியின் கனஅளவு அதிகரித்து குழாயின் பக்கச் சுவர்களில் அதிக அழுத்தத்துடன் மோதும். எனவே, குழாய்கள் உடைந்துவிடுகின்றன.
சாக்பீஸ் ஒன்றை நீரில் போட்டால் நீர் குமிழ்கள் வரக் காரணம் - சாக்பீஸானது சிறு சிறு துளைகளை உடையது. நீரில் மூழ்கடிக்கப்படும்போது சவ்வூடு பரவல் முறையில் துளைகளில் நீர் ஏறும். அங்கு இருக்கும் காற்றானது நீர்க் குமிழிகளாக வெளிவரும்.
பாரசூட் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுவதாலேயே பாரசூட்டில் மெதுவாக தரையிறங்க முடிகிறது.
ஆற்று நீரைவிட கடல் நீரில் அடர்த்தி அதிகம் இருப்பதால், கடலில் எளிதாக நீந்த முடிகிறது.
சிவப்பு நிற ஒளிக்கு அலை நீளம் அதிகம் இருப்பதால் அது போக்குவரத்து சிக்னல்களில் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டன்.
ஒளிச் சிதறல் பற்றிய சர் சி.வி.ராமனின் கண்டுபிடிப்புக்கு ராமன் விளைவு என்று பெயர்.
கடற்கரை மணலில் நடக்க சிரமமாக இருக்கக் காரணம்- மணலின் குறைந்த உராய்வு விசை (Friction).
தாவரங்கள் நீரை உறிஞ்சக் காரணம் நுண்புழைக் கவர்ச்சி (Capillarity).
விளக்கு திரியில் எண்ணைய் ஏறக் காரணம் நுண்புழைக் கவர்ச்சி (Capillarity).
பிளாட்டிங் பேப்பர் மையை உறிஞ்சுவது நுண்புழைக் கவர்ச்சி (Capillarity).
துணியிலிருந்து அழுக்கை சோப்பு அகற்றக் காரணம் பரப்பு இழு விசை (Surface tension).
நீர்த் துளியின் கோள வடிவுக்குக் காரணம் பரப்பு இழு விசை.
சில பூச்சிகள் நீரின் மேல் பரப்பில் நடக்க உதவுவது பரப்பு இழு விசை,பால் பாயின்ட பேனா செயல்படக் காரணம் பரப்பு இழு விசை மற்றும் நுண்புழைக் கவர்ச்சி ஆகிய இரண்டும்.
அழுத்தம் அதிகரித்தால் நீரின் கொதிநிலை அதிகரிக்கும் எனும் தத்துவத்தில் இயங்குவது பிரஷர் குக்கர்.
மலைப் பிரதேசத்தில் அழுத்தம் குறைவதால் நீரின் கொதி நிலை குறைந்து உணவு வேக தாமதமாகிறது.
நீரின் கொதி நிலை நீலகிரி மலையில் 94 டிகிரி செல்சியஸ் ஆகவும், பிரஷர் குக்கரில் 120° C ஆகவும் இருக்கும்.
எஸ்கிமோக்கள் இரட்டைப் பனிக்கட்டிச் சுவர் வீடுகளில் வசிக்கிறார்கள், ஏனென்றால் இரண்டு சுவருக்கு இடையிலான காற்று வெப்பத்தைக் கடக்க அனுமதிப்பதில்லை.
ஒரு பந்து கீழே விழுந்தால் ஏன் துள்ளுகிறது என எண்ணியதுண்டா- காரணம் ஒரு பந்து கீழே விழும்போது அதன் சமநிலை குலைகிறது. மீள்தன்மையின் காரணமாக பந்து தன் பழைய நிலையை அடைய முயற்சி செய்கிறது. அந்த முயற்சியில் அது பூமியை அழுத்துகிறது, அதனால் அது துள்ளுகிறது. (நியூட்டனின் மூன்றாவது விதி).
பாதரசத்தின் சுய மூலக்கூறு கவர்ச்சி, வெளி மூலக்கூறு கவர்ச்சியைவிட அதிகம் என்பதால், பாதரசம் கண்ணாடியில் ஒட்டுவதில்லை.
மண் பானையில் நீர் குளிர்த்திருக்கக் காரணம் பானையின் நுண்துளைகள் வழியே நீர் தொடர்ந்து ஆவியாவதே ஆகும்.
எண்ணெய், நீரைப் போல பாயும் தன்மை (Fluidity) அதிகமின்றி வழவழப்பாக இருக்கக் காரணம் அதிக பாகு நிலை (Viscosity).
பாகு நிலை அதிகமுள்ளதால், இயந்திரங்களில் உராய்வைக் குறைக்கும் உயவுப் பொருளாக (Lubricant) எண்ணெய் பயன்படுகிறது.
மூடிய அறைக்குள் கரியை எரியவிடுவது என் ஆபத்தானது என்றால்- கரி எரிவதால் உருவாகும் கார்பன் மோனாக்லைடு மூச்சு முட்டலை வர வைத்து ஆளையே கொன்றுவிடக் கூடும்.
பால் எப்படித் தயிராகிறது - பாலில் இருக்கும் லாக்டோஸ் நொதித்தலுக்கு உள்ளாகி வாக்டிக் அமிலமாக மாறுகிறது. அது பால் புரதத்துடன் (கேஸின்) வினைபுரிவதால் தயிர் உருவாகிறது.
துருப்பிடிக்கும் இரும்பின் எடை அதிகரிப்பதேன்? -- நீரேற்றப்பட்ட இரும்பு ஆக்ஸைடுதான் துரு. அது எடையைக் கூட்டவே செய்யும். இரும்புடன் ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் சேர்வதால்தான் துரு உருவாகிறது.
கொளுத்தப்பட்ட காகிதத்தை கார்பன் டை ஆக்ஸைடு திரம்பிய கலனுக்குள் கொண்டு சென்றால் அணைந்துவிடுவதேன்?. ஏனென்றால், கார்பன் டை ஆக்ஸைடு எரிதலுக்குத் துணை புரிவதில்லை.
--- தொடரும்.





