ஜூலை 10 - வேலூர் புரட்சி'1806

 

ஜூலை 10’ 1806 - வேலூர் புரட்சி..


1740-1799 ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடக, மைசூர் போர்களின் விளைவாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தென்னிந்திய பகுதியில் கோலோச்ச தொடங்கியது.


இவ்வாறாக சென்னை மாகாணத்தில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வலிமைமிக்க அரசியல் சக்தியாக உருவெடுத்தது. வில்லியம் பெண்டிங் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்


அப்போது ராணுவத் தளபதியாக இருந்த ஜான் கி ராடக் என்பவர் பல்வேறு ராணுவ கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதுவே வேலூர் புரட்சி ஏற்பட  காரணமாக அமைந்தது என கூறலாம்.


ராணுவத்தில் ஜான் ராடக் சில கடுமையான மாற்றங்களை அறிவித்தார். சிப்பாய்களின் உடைகளில் மாற்றம் கொண்டு வந்தார். சமய குறியீடுகளை பயன்படுத்தக் கூடாதென உத்தரவிட்டு காதணிகள் அணிதல், குடுமி வைத்துக் கொள்ளல் உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்து இந்து சிப்பாய்களுக்கு கோபத்தை உண்டாக்கின.


மேலும், சிப்பாய்கள் தாடி, மீசைகளை குறிப்பிட்ட அளவுதான் வைத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது முஸ்லீம் சிப்பாய்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.


உச்சக்கட்டமாக சென்னை மாநில ஆங்கிலேய படை தளபதி ஜான் ரடாக் அறிமுகம் செய்த புதிய தோல் தலைப்பாகை இந்து-முஸ்லிம் சிப்பாய்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அது மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக்கொழுப்பு பூசப்பட்டது என இந்து சிப்பாய்களும், பன்றித் தோலால் செய்யப்பட்டது என முஸ்லிம் சிப்பாய்களும் அத்தொப்பியை அணிய உத்தரவிடப்பட்ட ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தனர்.


புதியதாக அறிமுகப்படுத்திய தலைப்பாகையை அணிய மறுத்த சிப்பாய்களுக்கு 600 முதல் 900 சாட்டையடி தண்டனைகள் வழங்கப்பட்டு, பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.


1799- ஆம் ஆண்டு திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு அவரது வாரிசுகள் உள்ளிட்ட உறவினர்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். சிறையில் பணியில் இருந்த பெரும்பாலான வீரர்கள் பாளையக்காரர்களின் வழி வந்தவர்கள். தமிழ் மற்றும் கன்னடம் பேசும் பகுதியை சேர்ந்தவர்கள்.


ஏற்கனவே ராணுவ கட்டுப்பாடுகளால் வெகுண்டெழுந்து கொண்டிருந்த வீரர்கள் மிக விரிவான ஒரு புரட்சிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். சிப்பாய்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை திப்புவின் மகனான பதக் ஹைதரிடம் தெரிவித்து ரகசியத் திட்டத்திற்கு தலைமையேற்கும் பொறுப்பு திப்புவின் மகன்களிடம் தரப்பட்டது.


திப்பு சுல்தானின் மகன்கள் படேல் ஹைதர், இளவரசர்கள் அப்துல் தாலிக், மொகைதீன், மைசுல்தீன், முகமதுயாசில், முகமதுசுபான், ஷேக்கர் அல்லா, சிராசுதீன், இமாலுதீன் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர். அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் அரச குடும்பத்தின் பணியாளர்களைப் போல் வேடமிட்டு, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். திப்பு குடும்பப் பாதுகாவலராக லெப்டினெண்ட் கர்னல் மேரியேட் இருந்தார்.


1806 ஆம் ஆண்டு திப்புவின் மகள் திருமணம் வேலூர் கோட்டையில் நடைபெற்றது. திருமணத்தின் பொருட்டு சிப்பாய்கள் பலரும் ஒன்று கூடினர்.  குடிபோதையில் இருந்த ஒரு சிப்பாய் புரட்சி திட்டத்தின் ரகசியத்தை வெளியில் சொல்லிவிட்டதால் இனியும் தாமதிக்கக் கூடாதென நினைத்த சிப்பாய்கள். மறுநாள் 10-ஆம் தேதி அதிகாலையில் இந்திய சிப்பாய்கள் ஆங்கில அதிகாரிகளையும் ஆங்கில சிப்பாய்களையும் தாக்கத் தொடங்கினர்.


பெரும்பாலான ஆங்கிலேய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். புரட்சியில் சிறு பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. சில அதிகாரிகள் வாட்களால் வெட்டி கொல்லப்பட்டனர்.


இந்திய சிப்பாய்கள் வெற்றிகரமாக ஜூலை 10 ஆம் தேதி விடியும் வேளையில் வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கோட்டையில் திப்புவின் கொடி ஏற்றப்பட்டு திப்புவின் மகன் பதக் ஹைதர் அரசனாக அறிவிக்கப்பட்டார்.


கோட்டைக்கு வெளியே இருந்த ஆங்கில தளபதி காட்ஸ் என்பவர் இந்திய சிப்பாய்களால்  கோட்டை கைப்பற்றப்பட்ட செய்தியை ஆற்காட்டில் இருந்த இராணுவ முகாமிற்கு உடனடியாக தெரியப்படுத்தினார்.


அங்கிருந்து தளபதி கில்லஸ்பி தலைமையில் வேலூருக்கு விரைந்து வந்த ஆங்கிலப்படை, கஜானாவை திறந்து அதில் உள்ள பொருட்களை எடுப்பதில் தங்கள் கவனத்தை சிதற விட்டிருந்த இந்திய சிப்பாய்களில் பலரைக் கொன்று, கைது செய்து மீண்டும் கோட்டையை ஆங்கிலேயர் வசப்படுத்தினர். 


புரட்சி செய்த இந்திய சிப்பாய்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் .திப்புவின் குடும்பத்தினர் கல்கத்தா அனுப்பப்பட்டு அங்கே ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர்.


வேலூர் புரட்சி வெடித்தபோது சென்னை மாகாண கவர்னராக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்கும், மாநில முதன்மை படைத்தளபதி சர் ஜான் ரடாக்கும் பிரிட்டிஷ் அரசால் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.


வேலூர் புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு சற்றேறக்குறைய அதே காரணங்களுக்காக வட இந்தியாவில் சிப்பாய் கலகம் மூண்டது.


கோட்டையை மிகுந்த எழுச்சியுடன் கைப்பற்றிய சிப்பாய்களால் அதனை நெடுநாட்களுக்கு தம்வசப்படுத்தி வைக்க முடியாமல் போனதிற்கும், 1806- ஆம் ஆண்டின் வேலூர் புரட்சி உடனடியாக தோல்வி அடைந்ததற்கும் பின்வருவனவை காரணங்களாக அமைந்தன.

புரட்சிக்கு முறையான தலைமை இல்லை.

திப்புவின் மகன்கள் சிறையிலேயே இருந்ததால் அவர்களுக்கு போதிய போர்ப்பயிற்சி இல்லை.

புரட்சியில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்களுக்கு இந்திய அரசர்களின் உதவி கிடைக்கவில்லை.

புரட்சியை நடத்த திட்டமிட்டு இருந்த நேரத்தில் தொடங்காமல் முன்கூட்டியே அவசரகதியில் தொடங்கப்பட்டது.


இதன் விளைவாக வேலூர் புரட்சி விரைந்து முடிவுக்கு வந்தாலும், இப்புரட்சி 1857 ஆம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியாக அமைந்த வரலாற்று நிகழ்வு என கூறலாம்.


வரலாற்றில் முதல் இந்திய சுதந்திரப்போர் என சொல்லப்பட அனைத்து தகுதிகளும் இருந்தும், வரலாற்றில் மறைக்கப்பட்ட வேலூர் புரட்சி நிகழ்ந்து 200 ஆண்டுகள் முடிந்த தருவாயில் அரசு தபால்தலை வெளியிட்டு இப்புரட்சியை சிறப்பித்தது.


வேலூரில் கம்பீரமாக நிற்கும் வேலூர் புரட்சியின் நினைவுத்தூணுக்கு ஆண்டுதோறும் இந்நாளில் காவல்துறை அரசு மரியாதை செய்து வருகிறது.


இந்திய சுதந்திரப்போருக்கான விதை நம் தமிழ்நாட்டு வேலூர் வீரமண்ணில் விதைக்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்வோம்.. நம் வீரர்களின் நினைவை போற்றுவோம்..

 


Post a Comment

Previous Post Next Post