சூரியக் குடும்பம்- கோள்கள் பற்றி கேள்…

 

சூரியக் குடும்பம்- கோள்கள் பற்றி கேள்…

பிரபஞ்சத்தில்  மனிதனின் அறிவுக்கெட்டிய வரையிலான தேடலின் முடிவில் நாம் வாழும் இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூமி சூரியக் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்.

சூரியனையும், அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் சூரியக் குடும்பம் என அழைக்கின்றனர். சூரியக் குடும்பத்தில் பின்வரும் எட்டு கோள்கள் உள்ளன.

1.      புதன் (மெர்குரி / Mercury)

2.      வெள்ளி (வீனஸ் / Venus)

3.      பூமி (எர்த் / Earth)

4.      செவ்வாய் (மார்ஸ் / Mars)

5.      வியாழன் (ஜூபிடர் / Jupiter)

6.     சனி (சாடர்ன் / Saturn)

7.      யுரேனஸ் (Uranus)

8.      நெப்டியூன் (Neptune)

இந்த எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ, ஏரிஸ், சீரஸ் உள்ளிட்ட சிறிய கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன.

சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரியது சூரியன்இது ஒரு மிகச்சிறிய விண்மீன்தான். சூரியனைவிட மிகப்பெரிய விண்மீன்கள் அண்டத்தில் இருந்தாலும் அவை வெகுதொலைவில் இருப்பதால் அடக்கி வாசிக்கின்றன எனலாம்..

சூரியன் முழுவதும் வாயுக்களால் ஆனது. சூரியனின் காந்தவிசை இக்குடும்பத்திலுள்ள அனைத்து கோள்கள் மற்றும் பிற பொருட்களை தன் கட்டுக்குள் வைத்துள்ளது.

கோள்களை கிரகங்கள் என்றும் சூரியனை விண்மீன், நெருப்புக்கோளம் என்றும் அழைக்கின்றனர்.

சூரியன் அதிக வெப்பம் உமிழக்கூடியது என்றாலும் அதன் துணையின்றி உலகில் உயிரினங்கள் வாழ முடியாது.

கோள்கள் அனைத்தும் சூரியனை ஒரு மையமாகக் கொண்டு வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் சூரியனை மிகப் பெரிய வெப்பப் பந்து என்று தான் குறிப்பிடவேண்டும். சூரிய மண்டலத்தில் பூமியும்கூட பொருத்தமானதொரு இடத்தில் அமைந்து கொண்டு சூரிய வெப்பத்தோடு நட்பு பாராட்டிக் கொண்டிருப்பதால்தான் நாம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இனி சூரியனை சுற்றி வரும் கோள்களை பற்றி பார்ப்போம்..!

புதன் (மெர்குரி / Mercury)

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன்.

இதுவே சூரிய குடும்பத்தில் முதல் கோளாகும்.

மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே விரைவாக சுற்றி வருகிறது.

இந்த அவசரத்தோடு சூரியனையும் சூப்பர் ஃபாஸ்ட்டாக சுற்றி விடுகிறது புதன். சூரியனை ஒரு முறை சுற்றி வர புதன் கிரகம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 88 நாட்கள். அதாவது, பூமியின் 88 நாட்கள் புதனின் ஒரு ஆண்டுக்குச் சமம்.

புதனில் இருந்து ஆயா வடைசுடும் கதைகள் கேட்க முடியாது. ஆம் புதனுக்கு துணைக் கோள்கள் கிடையாது. அதாவது இக்கோளுக்கு நிலாக்கள் ஏதும் இல்லை.

புதன் சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே மிகச் சிறியது.

சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், சூரியனின் ஒளிக்கிடையே இதைப் பெரும்பாலான நேரங்களில் காண முடியாது. ஆனால், அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்னர் அல்லது மாலையில் சூரியன் மறைந்த பின்னர், சூரியனின் கிட்டே இருந்து கெத்து காட்டும் புதன் கோளை அடிவானில் பார்க்க முடியும்.

 வெள்ளி (வீனஸ் / Venus)

வீனஸ் வீனஸ் பெண்ணே என சரியாகத்தான் பாடியிருக்கிறான்.. ஆம் வெள்ளிக்கோள் ஒளி வீசி பளிச்சிட்டு ஜொலிக்கும் ஒரு கோள்.

அதிக அளவில் ஒளிரும் வெள்ளிக்கோளை பூமியிலிருந்து அதிகாலையில் பார்க்க முடியும்.

சூரியனிலிருந்து இரண்டவதாக உள்ள கோள் வெள்ளி . சூரியனிடமிருந்து 10 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சுற்றி வருகிறது.

சூரியனைச் சுற்றும் கோள்களிலேயே அதிக வெப்பமான கோள் இது தான். காரணம், இக்கோளில் உள்ள அதிகப்படியான கார்பன் டைஆக்சைடு வாயு சூரியனின் வெப்பத்தை பெருமளவில் உள்வாங்கிக் கொள்கிறது.

இது பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்.

பூமியின் இரட்டை(Twin Planet to Earth) என்றுகூட வெள்ளிக்கு ஒரு சிறப்பு உண்டு. அப்படி அழைக்கக் காரணம் பூமியின் நிறை, அளவு, உருவான மூலப் பொருள்கள் அனைத்திலும் பூமிக்கு நிகராக சூரியக் குடும்பத்தில் வெள்ளிப் பெண் பக்கத்து வீட்டு சகோதரிபோல பூமித்தாய்க்கு நட்பு பாராட்டுவதே ஆகும்..   

இரவில் அதிக அளவில் பளிச்சிடும் ஒளி வீசும் கோள் வெள்ளிதான். இதுவே பளீரென எரியும்போது, பல்ப் எரியும் நிலா எதற்கு.. ஆம் வெள்ளி கோளுக்கென்று நிலாக்கள் ஏதும் இல்லை.

சூரியன் உதிக்கும் திசையை மாற்றிச் சொன்னாலும் மார்க் உண்டு… ஆச்சரியம் வேண்டாம்.. வெள்ளியில் சூரியன் மேற்கில் தோன்றி, கிழக்கில் மறையும். காரணம் வெள்ளி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது.

இது அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்னர் கிழக்கிலும், மாலையில் சூரியன் மறைந்த பிறகு மேற்கிலும் வானில் தோன்றும். இது நட்சத்திரம் இல்லையென்றாலும், இதனை காலை நட்சத்திரம் (Morning Star) என்றும் மாலை நட்சத்திரம் என்றும் அழைப்பர்.

வெள்ளி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 225 நாட்கள். அதாவது, பூமியின் 225 நாட்கள் வெள்ளியின் ஒரு ஆண்டுக்குச் சமம்.

 பூமி (எர்த் / Earth)

மனிதர்களின் இருப்பிடமாக திகழும் பூமிதான் மூன்றாவது கோள்.

 சூரிய குடும்பத்தில் காற்று, நீர் போன்றவை சூழப்பட்டு உயிரினங்கள் வசிக்கக்கூடிய கோளாக பூமி மட்டுமே கருதப்படுகிறது.

திடமான கோளாக திகழும் பூமியைச் சுற்றி காற்று மண்டலம் உள்ளது. அதில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் நிறைந்து இருப்பதாலும், பூமியில் உள்ள நீர், உயிர்கள் வாழ்வதற்கேற்ற வளிமண்டலம் மற்றும் ஓசோன் அடுக்கு ஆகியவைகளோடு சூரியனிலிருந்து தகுந்த தொலைவில் இருப்பதால், பூமியின் வெப்பநிலையும் உயிர்கள் வாழ்வதற்கேற்றவாறும் அமைந்துள்ளது.

புவியில் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ முடிகிறது. எனவே தான் பூமி ஒரு உயிர்கோள் என புகழப்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு ஏறத்தாழ 150 மில்லியன் கி.மீ அதாவது 15 கோடி கி.மீ.

பூமியை ஒரு நிலா சுற்றி வருகிறது. அதில்தான் பாட்டி வடை சுடுவதாக  நாம் குழந்தைகளிடம் வடை சுட்டுக் கொண்டிருக்கிறோம்.

விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும்போது நீலம் மற்றும் பச்சை நிறமாகக் காட்சி அளிக்கும். உயிரினங்கள் வாழ்வதற்கான சாட்சியாக இருந்தாலும், இந்த நிறத்திற்கான உண்மைக் காரணம், கடல் மற்றும் நிலப்பரப்பின் மீது விழும் சூரிய ஒளியின் எதிரொளிப்பே ஆகும்.

இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியை மையமாக கொண்டு சந்திரன் துணைக் கோளாக சுழல்கிறது. சூரியனை ஒருமுறைச் சுற்றி வர பூமி 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

கொஞ்சம் நிதானமாகவே நமது வயது ஏறட்டுமேயென பூமித்தாய் கருணை காட்டியுள்ளாள்…  ஆண்டுகள் பல வாழ வேண்டுமெனில் பூமிப்பந்தை பூப்போல காக்க வேண்டுமென்பதை நினைவில் வைப்போம்..

செவ்வாய் (மார்ஸ் / Mars)

சூரியக் குடும்பத்தின் நான்காவது கோள் செவ்வாய்.

பூமி மற்றும் வெள்ளி ஆகிய இரண்டினைக் காட்டிலும் மிகச்சிறிய கிரகமாக உள்ளது.

இது லேசான சிவப்பு நிறத்தில் உள்ளதால் சிவப்பு கோள் (Red Planet) எனவும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் செவ்வாயில் அதிக அளவில் இரும்பு ஆக்சைடு (Iron Oxide) உள்ளது.

பூமியின் அளவில் பாதியாக இருக்கும் இது மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது.

இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 687 நாட்கள்.

இதன் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 0.375 பங்கு தான் உள்ளது.

செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள் உண்டு.

இதன் வளி மண்டலம் பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடாலும் சிறிது நீராவியாலும் ஆனது. இதில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என உலக நாடுகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில் செவ்வாய்க்கு ரெண்டு டிக்கெட் கொடுப்பான்னு கேட்க மாட்டோமான்னு ஏக்கமாத்தான் இருக்கு… என்ன செய்ய!

வியாழன் (ஜூபிடர் / Jupiter)

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் ஐந்தாவது இடத்தில் சூரியனை சுற்றி வருகிறது.

நம் பூமியைப் போல் 1300 பூமிகளை இதனுள் அடக்க முடியும்.

இக்கோளில் பெரிய சிவப்பு வட்டம் உள்ளது.

இது சூரியனை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வலம் வருகிறது.

63 துணைக்கோள்கள் உடைய இக்கோள் சூரியனை சுற்றி வர சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.

வியாழனில் ஒரு நாள் என்பது 10 மணி நேரங்களைக் கொண்டது. அப்ப 3 மணி நேரம் ஆபிஸ் போனா போதுமான்னு கேக்கறது தெரியுது!

இது ஒரு வாயுக்கோள். இதன் வளிமண்டலம் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது. பஸ்பமாகிடுவோம்.. so no chance to live there…

வியாழனின் நிறை பூமியின் நிறையப் போல் 318 மடங்கு அதிகம்.

இதைச்சுற்றி தூசித் துகள்களாலான வளையங்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் பார்க்க முடியாது...

 சனி (சாடர்ன் / Saturn)

ஆறாவது இடத்தில் உள்ள இந்த சனிக் கோளைச் சுற்றி பெரிய வளையங்கள் உள்ளன.

இது மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும்.

சனியைச் சுற்றி அழகிய ஏழு வளையங்கள் உள்ளன.  நுண்கற்கள், தூசு, பனி போன்றவற்றை கொண்ட தொகுதிதான் வளையம் போலத் தோற்றமளிக்கிறது.

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் சுழலும் சனிக் கோளுக்கு 60 துணைக் கோள்கள் உள்ளன. பாட்டியோட பரம்பரையே அங்கங்க கடைபோட்டு வடைசுடலாம்..

சனிக் கோள் சூரியனை சுற்றி வர சுமார் 29 ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.

வியாழனுக்கு அடுத்தபடியாக, சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் இரண்டாவது மிகப்பெரிய கோள் இது.

இக்கோளில் ஒரு நாள் என்பது 10.7 மணி நேரங்களைக் கொண்டது.

யுரேனஸ் (Uranus)

சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸை சுற்றி வாயுக்களால் ஆன வளையங்கள் காணப்படுகின்றன.

இது மிகப்பெரிய பனிக்கோள். Cool கோள்.

மிகவும் குளிர்ச்சியான கோளான இது பனிகளால் நிறைந்ததாக கருதப்படுகிறது.

இதற்கு 27 துணைக் கோள்கள் உள்ளன. இதில் டைட்டானியா, ஒபேரான், அம்பிரியல், ஏரியல் மற்றும் மிராண்டா ஆகிய கோள்கள் மிகப்பெரிய கோள்களாகும்.

இதைச் சுற்றி 13 வளையங்கள் உள்ளன.

இது பூமியைப் போல் 4 மடங்கு பெரியது. தூரமா இருந்தாலும் பக்கா மாஸ்..

இது சூரியனை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகின்றன.

வெள்ளியை (வீனஸ்) போல் யுரேனசும் கிழக்கிலிருந்து மேற்கில் தன் அச்சில் சுழல்கிறது.

இது தன் அச்சில் மிக அதிகமாகச் சாய்ந்துள்ளது. இதனால், இது தரையில் உருண்டு செல்லும் பந்து போல் கிடைமட்டமாக, அதாவது பக்கவாட்டில் சுழன்றுகொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது. ஜாலியா டைம் பாஸ் பண்ணுது!

நெப்டியூன் (Neptune)

சூரியனிலிருந்து எட்டாவது இடத்தில், அதாவது யுரேனசுக்கு அடுத்து இருக்கும் கோள் நெப்டியூன்.

இக்கோளைச் சுற்றியும் வாயு வளையங்கள் உள்ளன. இது மேற்கில் இருந்து கிழக்காக சூரியனை தன்னைத்தானே சுற்றிவரும்.

இதற்கு 13 துணைக் கோள்கள்.

மேகங்கள் சூழ்ந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இக்கோள் சூரியனைச் சுற்றிவர சுமார் 160 ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.

இது தனது அச்சில் சுற்றிக்கொள்ள எடுத்துக் கொள்ளும் காலம் 17 மணி நேரம். அதாவது, இதன் ஒரு நாள் 16 மணி நேரத்துக்குச் சமம்.

புளூட்டோவிற்கு மரியாதை போனதால சூரியக் குடும்பத்தின் கடைக்குட்டி சிங்கமா சுத்துது நெப்டியூன்..

 புளூட்டோ – Pluto (Dwarf Planet)

சின்ன வயசுல இருந்து கோள்கள் ஒன்பதுன்னு படிச்சதுக்கு காரணமே இந்த பயபுள்ளதான்…

ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்ட புளூட்டோவில், கோளுக்குரிய பண்புகள் இல்லாததால் கோள் அந்தஸ்த்தில் இருந்து கழட்டிவிடப்பட்டு ஆகஸ்ட் 2006-ல் குறுங்கோள்(DWARF PLANET) என புதிதாக வகைப்படுத்தி உள்ளனர்.  

Kuiper Belt எனப்படும் வளையத்தில் அமைந்துள்ள புளுட்டோ 1930-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுசிறு கற்கள், பெரும்பாறைகள், வன்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு உருவானதாக கருதப்படுகிறது.


புளுட்டோவைப்போல ஏரிஸ்,சீரஸ், ஹௌமியா என பல குறுங்கோள்கள் உள்ளன.

 மீச்சிறு கோள்கள் (ஆஸ்ட்ராய்ட்கள் – Asteroids)


செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மீச்சிறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.

இவை மிகப் பெரிய பாறைகளால் ஆனவை.  

இவைகள் அடிக்கடி உடைந்து உராய்ந்து வளிமண்டலம் உள்ளே நுழைய விரும்பி பொசுங்கி காற்றில் காணாமல் போய்விடும்..

இந்த மீச்சிறு கோள் பட்டை (Asteroid Belt) சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களை இரண்டு குழுக்காளாகப் பிரிக்கிறது.

திடக்கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் சூரியனுக்கும் இந்த மீச்சிறு கோள் பட்டைக்கும் இடையில் உள்ளன.  இவை நான்கும் உட்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.

மீச்சிறு கோள் பட்டைக்கு வெளியிலுள்ள வாயுக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய மற்ற நான்கு கோள்களும் வெளிக்கோள்கள் எனப்படுகின்றன.

-- இவ்வளவுதான் சூரியக்குடும்பம்.. நம்ம வீட்டு குழந்தைகளுக்கு கதை சொல்லவாச்சும் நமக்கு கிரகம் பிடிச்சாகனும்.. பிடிபடலன்னா மேல போய் இன்னொருவாட்டி படிச்சிடுங்க.. நன்றி..

வேறொரு தலைப்பில் மீண்டும் சந்திப்போம்…

💥💥💥💥

சமச்சீர் கல்வி புவியியல்(GEOGRAPHY) STUDY MATERIALS DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்... 

💥💥💥💥

Post a Comment

Previous Post Next Post